அரசியல்

உலக பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்

بسم الله الرحمن الرحيم

இன்றைய உலகில் பொருளாதாரத்தில் வல்லுனர்கள்களையும்,நிபுணர்களையும் கொண்டு பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.ஆனால் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கண்டார்களா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.உலக வல்லரசின் அரசன் என்று கூறப்படும் அமெரிக்கா உலகின் எல்லா நாடுகளையும்,அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்ற நாடு. உலகின் எங்கு மனித இனம் பாதிக்கப்படும் போதும் உதவிகளை வாரி வழங்கக்கூடிய நாடு, உலகிற்கே சட்டங்களை வழங்கக்கூடிய, உலக சண்டைகளின் போது சமாதானத்தை ஏற்படுத்தும் அமைப்பான ஜ.நா சபையை வைத்துக் கொண்டிருக்கினற நாட்டில் பொருளாதாரம் படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. அங்கே சரிந்த உடன் உலகம் முழுக்க அதன் எதிரொலிப்புகள் பிரதிபலிக்கின்றன. அமெரிக்க வங்கிகள், அதனைச் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டங்கண்ட உடன் அதில் தன் பங்குகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் மாற்று வழியை தேடி அலைவதை காண முடிகிறது.

ஏன் இந்த சரிவுகள் என்று சிந்தித்தால் பொருளாதார கொள்கையில் சரியான சட்டங்கள் இல்லாததே காரணம்.

வட்டி ஓர் கொடிய பாவம்

இன்று எல்லா வியாபார நிறுவனங்களும் வட்டியை அடிப்படையாக கொண்டு செயல் படுவதாலும், வணிகத்தில் பதுக்கல், கண்ணால் பார்க்காத பொருள்களை ஆன் லைன் வியாபாரம் என்ற போர்வையில் தாராளமாக செயல் படுவதின் காரணத்தினாலும்; உலகம் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படிப்பட்ட வியாபாரங்களுக்கு தடை விதித்துள்ளார்கள்.

இரும்பிலிருந்து துரும்பு வரை வட்டியை மையமாக வைத்து விற்கவும், வாங்கவும் படுகின்றன. எனவே தான் பொருளாதார வீழ்ச்சியும், விலைவாசி ஏற்றமும் ஏற்படுகின்றன. வட்டியின் அடிப்படையை வைத்து இயங்கும் வங்கியும், வர்த்தக நிறுவனங்களும் நொடிந்தும், வட்டியின்றி இயங்கக்கூடியவைகள் தலை நிமிர்ந்தும் நிற்கின்றன.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உலகை மீட்டு எழுச்சி காண வேண்டுமானால் வட்டி என்ற கொடிய நோயை அகற்றியே ஆக வேண்டும். இதனால் தான் எந்த குற்றத்திற்கும் இல்லாத தண்டனையை இஸ்லாம் வட்டிக்கு வழங்கியுள்ளது.

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம் அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அல்குர்ஆன் 2:275

வட்டி வாங்குபவன் மறுமையில் கடுமையான தண்டனைகளை சந்திப்பதோடு நரகில் என்றும் நிரந்தரமாக வேதனையை அனுபவிக்க வேண்டும்.என்ற கடும் சட்டங்களை இறைவன் வழங்கியதிலிருந்து வட்டியை வன்மையாக கண்டிப்பதை பார்க்க முடிகின்றது.

மேலும் “நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றிருந்தார். அந்த மனிதர் ஆற்றைவிட்டு வெளியேற முயலும்போது இவர் அவரின் வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் ‘என்ன இது?’ எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ எனக் கூறிவிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள்.” (ஹதீஸின் சுருக்கம்) நூல்:புகாரி 2085

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். அல்குர்ஆன் 2:279

வட்டி வாங்குபவர்கள் படைத்தவனிடத்தில் போர் புரிய தயாராகி விட்டார்கள்.என்று இறைவன் வன்மையாக கண்டிப்பதிலிருந்து இது மிகப் பெரும் பாவம் என்பதை விளங்கமுடிகின்றது. வட்டியின் மூலமே வர்த்தகம் சாத்தியம் இல்லையேல், சாத்தியமில்லை என்று அறிவிலிகள் சொல்லும் வாதம். அல்லாஹ்வின் வாதம் அல்ல.

எனவே வட்டியை அடியோடு வர்த்தகத்திலிருந்து அகற்றி விட்டால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை மீட்க முடியும்.

பண்டங்களை பதுக்காதீர்கள்

கொழுத்த வியாபாரிகள் தங்களிடமுள்ள பொருளாதாரத்தை வைத்து பொருட்களை பதுக்கி வைத்து தட்டுபாடு காலங்களில் அந்த பொருளுக்கு பன் மடங்கு விலை வைத்து விலை வாசியை ஏற்றி விடுகின்றனர். இது மக்களுக்கு செய்யும் மிகப் பெரும் துரோகமாகும்.எனவே தான் இஸ்லாம் பொருளை பதுக்காதீர் மக்களுக்கு தடையின்றி பொருள்கள் கிடைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

யார் மோசடி செய்கின்றாரோ அவர் நம்மை சார்ந்தவரல்ல என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:முஸ்லிம் 148

கடனில் கண்ணாக இருக்க வேண்டும்

இன்று அரசாங்கம் மக்கள் செல்வாக்கை தக்க வைத்து கொள்ள வேண்டும் எனபதற்காக மக்களுக்கு தேவையில்லாத, ஆடம்பர பொருள்களை தானமாக வழங்குகின்றன. ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன.

மக்களுக்கு வீடு கட்டுவதற்கும், தொழில் செய்வதற்கும், பட்ட படிப்புகள் படிப்பதற்கும் கடன் உதவிகள் வழங்கும் போது முறையாக நடந்துக் கொள்கின்றார்களா? என்றால் இல்லை. ஏழைகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை ஏய்க்ககூடிய பண முதலைகளுக்குதான் கடன் வழங்கப்படுகின்றன.இதனால் வழங்கப்பட்ட கடன்கள் திரும்ப செலுத்தப்படாமல் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யபடுகின்றது. மானியம் வழங்கப்படும் என்ற ஆசையில் அரசாங்க நிதியை விழுங்கக்கூடிய நிலை ஏற்படுகின்றது.

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனணயின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது.(வசனத்தின் சுருக்கம்) அல்குர்ஆன் 2:282

ஏழை மாணவர்கள் இலேசாக கல்வி கடன் பெற முடிவதில்லை.அவர்களுக்கு அடுக்கடுக்கான விதிமுறைகள்.ஆனால் செல்வந்தர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சிரமமின்றி சலுகைகள் பெறுகின்றனர்.ஆனால் இஸ்லாம் கூறும் நியதியை பாருங்கள்.என்று மாற்றுமத பத்திரிக்கையாளர் இ.ரா. சோமசுந்தரம் போன்றவர்கள் சான்று பகருகின்றனர்.

♦ தொழில் கல்வி பயிலும் அனைத்து மாணவனுக்கும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கல்வி கடன் தரமுடியும். அதற்கு வங்கிகள் இஸலாமிய வங்கி நடைமுறைக்கு மாறியாக வேண்டும்.குறைந்த பட்சம் கல்வி கடன் மட்டுமாகிலும்.

♦ ஏழைகளுக்கு கடன் வழங்கி அதை அவர்களால் செலுத்த முடியாவிடின் அதை தர்மமாக வழங்கி விட வேண்டும் என்ற இஸ்லாம் கூறும் தத்துவத்தை கால போக்கில் உலகம் ஏற்றுக் கொள்ளும் தூரம் மிக அருகாமையில் உள்ளது.

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள். இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் – (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். அல்குர்ஆன் 2:280

திரும்ப செலத்தும் நோக்கம் இல்லாமல் கடன் பெறக்கூடாது.

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். நூல்:புகாரி 2387

இந்த கொள்கையை கடை பிடிக்காத காரணத்தால் இன்று மிகப்பெரும் வங்கிகளும் வழுக்கி விழுகின்றன.

கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாவிடில் சுவனம் கூட செல்லமுடியாது என்றும் இஸ்லாத்தின் உயர்ந்த அந்தஸ்து பெற்றிருக்கும் ஷஹீத்களும் கடன் விசயத்தில் தப்பமுடியாது என்று இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.

சுய தொழில் செய்! சோம்பேரி ஆகாதே!!

இஸ்லாம் வணக்கங்களுக்கு முக்கியத்துவம் தருவது போல் தொழிலுக்கும் முக்கியத்துவம் தருகின்றது.தொழில் காரணமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும்.ஊதாரியாக திரிந்து அடுத்தவனிடத்தில் கையேந்தாதே! என்று கூறுகின்றது.எனவே தான் வணக்கம் செய்யும் நாளான வெள்ளிக்கிழமையில் கூட இறை வணக்கம் முடிந்ததும் பிழைப்பைத் தேடிச் செல் என்று கூறுகின்றது.

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள். அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். அல்குர்ஆன் 62:10

நபி(ஸல்)அவர்கள் தன் கரத்தால் தொழில் செய்யும் வியாபாரியின் கையை பிடித்து முத்தமிட்டார்கள் என்றால் அவர் உழைக்கின்றார் ஊதாரியாக இல்லை என்பாற்காகவேதான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர். நூல்:புகாரி 2072

ஆண்கள் உழைப்பதைப் போன்று பெண்களும் உழைப்பாளிகளாக இருந்தால் அதில் அவர்களுக்கு உரிமை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது.

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும். ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான் அல்குர்ஆன்: 2:228

எனவே ஒரு குடும்பத்தில் பல உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றால் அனைவரும் உழைக்கக் கூடியவர்களாக இருந்தால் அக்குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி இல்லாமல் செல்லும் நிலை ஏற்படும். ஆனால் இன்று ஒருவரின் வருமானத்தை வைத்து பலர் சாப்பிட்டு குடும்பத்தில் நெருக்கடியை உண்டு பண்ணுகின்றனர்.

ஏழை வரிகளும் எளிய வழிகளும்

நான் சம்பாதித்தவைகள் எனக்கும் என் மனைவி,மக்கள்,என் உறவினர்கள் இவர்களுக்கு மட்டுமே சொந்தம் அதில் இவர்களுக்கு மட்டுமே உரிமை இருக்கின்றது.மற்றவர்களுக்கு இல்லை என மனிதர்கள் நினைக்கின்றனர்.இதனால் பணம் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படாமல் சிலரிடத்தில் மட்டுமே சுழன்றுக் கொண்டிருக்கின்றது.எனவே தான் இஸ்லாம் பணம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக வகுத்து கொடுத்த பல திட்டங்களில் சிறப்பு திட்டம் தான் செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வழங்கும் எழைவரி எனும் ஸகாத் திட்டமாகும்.

அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. அல்குர்ஆன் 51:19

இந்த ஏழை வாழ எனும் நிதியை மக்கள் வழங்க வில்லை என்றால் அவர்களிடமிருந்து பறித்து எடுப்பதற்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது.என்பதை குர்ஆனின் அரபி மூலச் சொல்லிருந்து அறிய முடிகின்றது.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக. நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான அல்குர்ஆன் 9:103

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் போது அவருக்கு செய்யப்படும் உபதேசங்களில் முக்கியமான உபதேசம் ஸகாத் எனும் வரி கொடுப்பதற்கு நீ தகுதி உடையவனாக இருந்தால் அதை செலுத்த வேண்டும்.

எனவே தான் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அபூகக்கர் (ரலி) அவர்கள் முதல் கலீஃபாவாக பதவி ஏற்றதும் சிலர் நாங்கள் ஏழைவரி செலுத்த மாட்டோம் என்று மறுத்த போது பொறுமையின் சிகரம் பொங்கி எழுந்து நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நீங்கள் கொடுத்து வந்த ஒரு ஒட்டகத்தின் கயிற்றை இப்பொழுது என்னிடத்தில் தர மறுத்தாலும் உங்களுக்கு எதிராக நான் போர் புரிவேன் என்று கர்ஜித்தார்கள். நூல்:புகாரி 1399-1400

இத்திட்டத்தை வைத்தே ஏழைகளின் வாழ்க்கை நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்விசயத்தில் கடுமையாக நடந்துக் கொண்டார்கள் என்று பார்க்க முடிகின்றது.ஆனால் இத்திட்டங்களை புரிந்துக் கொள்ளாமல் அரசாங்கத்திற்கு மக்கள் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்ட பல வரி சட்டங்கள் அரசாங்கத்தை ஏமாற்றும் சட்டங்களாகவே இருக்கின்றது. எனவே பொருளாதார சட்டங்களில் இஸ்லாம் கூறும் சட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள முடியும் என்பதுதான் இன்று உலகம் பெற வேண்டிய பாடங்கள்.