பித்அத்கள்

முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்

بسم الله الرحمن الرحيم

முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்

முஹர்ரம் மாதம் 10ம் நாள் ஆஷூரா தினம் என்று கூறப்படும். அந்த நாளின் சிறப்பை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக அன்றைய நாளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனாச்சாரங்களை காண்போம்.

பஞ்சா எடுப்பது, மாரில் அடித்துக் கொள்வது, தீக்குழியில் இறங்குவது, துக்கம் கடைபிடிப்பது, கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்கள் செய்து வைத்து பாத்திஹாக்கள் ஓதுவது. இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் பேரர் ஹூசைன்(ரலி) அவர்கள் இறந்ததற்காக செய்யப்படும் அனாச்சாரங்களாகும். நபி (ஸல்) அவர்கள் இறந்ததற்காகவோ, அவர்களுடைய மனைவி மக்கள் இறந்ததற்காகவோ, எந்த ஒரு நபித்தோழர்களும் இவ்வாறு செய்ததில்லை. ஷைத்தானின் சதித்திட்டத்தால் அவர்களின் பேரர் இறந்த பின் மக்களால் ஏற்படுத்தப்பட்ட இச்செயல் இன்று வரை நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவர்களின் மரணம் ஒன்றும் புதிதல்ல,அல்லாஹ்வால் படைக்கப்பட்ட எல்லா படைப்பினங்களுக்கும் இறப்பை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.’ (அல்குர்ஆன்: 3:185)

நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப்பலமாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (அல்குர்ஆன்: 4:78)

எந்தஒரு மனிதனுடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க அனுமதி இல்லை. ஜைனப் பின்த் ஸலமா (ரலி) என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடைய மனைவி உம்மு ஹபீபா (ரலி) அன்ஹா அவர்களிடம் அவருடைய தந்தை அபூ சுப்யான் அவர்கள் மரணமடைந்த (சில நாட்களில்) சென்றேன். அப்போது அவர்கள் மஞ்சள் நிற பொருளையோ அல்லது அது போன்ற நறுமணப் பொருளையோ வரவழைத்தார்கள். பின்னர் அங்கிருந்த ஒரு சிறுமிக்கு அதை தடவினார்கள். பின்னர் தாங்களும் தங்களின் இரு கண்ணங்களிலும் தடவிக் கொண்டார்கள். பின்னர் இவ்வாறு கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு நறுமணப் பொருள்களின் பக்கம் இப்போது தேவை இல்லை எனினும் நான் இப்போது நறுமணத்தை உபயோகித்ததற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் மின்பரில் கூறக்கேட்டிருக்கின்றேன். ”அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட பெண்மணி எந்தவொரு மரணத்திற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது.” எனினும் தனது கணவரின் மரணத்திற்காக அப்பெண்மணி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைபிடிப்பாள். அதாவது இத்தா இருப்பாள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஆனால் இன்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மரணமான நபி(ஸல்) அவர்களின் பேரரின் மரணத்திற்காக இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களின் சொல்லை புறக்கணித்து வாழ்பவர்களின் கூட்டத்தில் இணைத்து விடும். எனவே இப்பூமியில் பிறந்து இறந்த எவருக்காகவும் ஒரு நாளை நிர்ணயம் செய்து துக்கம் கடைபிடிப்பது அல்லது அவர்களின் ஞாபகமாக நினைவு நாள் கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அல்ல. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னுடைய கப்ரை (நினைவுநாளாக) வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள். (அபூஹூரைரா(ரலி) நூல்: அபூதாவுத்.)

இன்னும் நபித்தோழர்கள் கூறுவதைப் பாருங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் பைஅத் (உறுதிப்பிரமாணம்) செய்த போது நாங்கள் ஒப்பாரி வைத்து அழமாட்டோம் என்ற உறுதி மொழியை பெற்றுக்கொண்டார்கள். (உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி முஸ்லிம்)

அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (என்தந்தை) வியாதியால் வேதனைப்பட்டு மயக்கமடைந்தார். அவருடைய தலை அவரின் குடும்பப் பெண்களில் ஒருவருடைய மடியில் இருந்தது அப்போது ஒரு பெண் சப்தமிட்டு (ஒப்பாரிவைப்பதற்காக) அங்கு வந்தார். அந்தப் பெண்ணின் அச்செயலை மறுத்துரைக்க அவர் சக்தி பெற்றிருக்க வில்லை. அவர் மயக்கத்திலிருந்து விடுபட்டதும் நபி (ஸல்) அவர்கள் எவர்களை விட்டும் விலகி இருந்தார்களோ அவர்களை விட்டு நானும் விலகிக்கொள்கிறேன். நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்து அழுகும் பெண்ணை விட்டும் சோதனை (சிரமதுடைய) நேரத்தில் தலையை மொட்டை அடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தன் ஆடைகளை கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் நீங்கியவர்களாக உள்ளார்கள் எனக் கூறினார்கள். (நூல்:புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘யார் முகத்தில் அடித்துக் கொண்டு இன்னும் சட்டைப்பையை கிழித்துக் கொண்டும் அறியாமை காலச் செயல்களின் பால் மக்களை அழைக்கின்றாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (இப்னுமஸ்வூத்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

மிகப் பெரிய எச்சரிக்கை:
ஆனால் இன்று அன்றைய தினம் மார்பகங்களில் அடித்துக் கொண்டு தன்னையே வதைத்துக் கொள்ளும் அவலத்தை பார்க்கிறோம். இது யாருடைய பழக்கம் என்றால் அறியாமைக்கால மக்களின் பழக்கம், இன்னும் மாற்றார்களின் பழக்கம். இதை செய்பவர் நபி (ஸல்) அவர்களைச் சார்ந்தவரல்ல. எனவே இதுபோன்ற அனாச்சாரங்களை தவிர்த்து கொண்டு மார்க்கத்தின் அடிப்படையில் செயல்படுவோம்.

சிறப்புகள்:
ரமழானின் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பாக அல்லாஹ்வின் மாதமான முஹரம் மாதத்தின் நோன்பாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்: முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: புகாரி)

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்)

இவ்வளவு சிறப்பை பெற்றுள்ள இந்த நோன்பை நோற்பவர்களை விட அனாச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் நம்மில் அதிகமானவர்கள். எனவே மார்கத்தில் அனுமதித்துள்ள நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்.அனாச்சாரங்களை விரட்டி அடிப்போம்.

நோன்பு நோற்கும் நாட்கள்:
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோதுஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்)மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். மேலும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள், நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். மற்றொரு அறிவிப்பில் அடுத்த வருடம் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள் அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுமென்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் ஒன்பது, பத்து ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க கட்டளை இட்டுள்ளார்கள். எனவே இந்த தினங்களில் நோன்பு நோற்பது முஹர்ரம் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.

எனவே நோன்பை நோற்று நமது பாவங்களை போக்கிக் கொள்வதுடன் நபி (ஸல்) அவர்களுடைய சொல்லுக்கும் கட்டுப் பட்டவர்களாக ஆகுவோம். இதுவே அல்லாஹ்விற்கு பொருத்தமானதாக அமையும். இதனடிப்படையில் நமது செயலை அமைத்துக் கொள்வோமாக!.

நோன்பையே பிற சமூகத்தாருக்கு ஒப்பில்லாமல் வைக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ள நாம் இன்றைக்கு எத்தனையோ விசயங்களில் மாற்றார்களுக்கு ஒப்பாகவோ அல்லது அதைவிட மோசமாகவோ நடக்கிறோம் உதாரணமாக: முஹர்ரம் மாதம் திருமணம் முடிக்கக் கூடாது, புதிதாக திருமணம் முடித்த தம்பதிகள் சேரக்கூடாது, இன்னும் 10 தினங்கள் மாமிச உணவுகள் சாப்பிடக்கூடாது போன்ற செயல்கள். உண்மையிலேயே இதுயாருடைய கலச்சாரம் என்று சிந்தித்துப் பார்த்துதெளிவு பெறுவோம். யார் எந்த ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னுஉமர்(ரலி)நூல்:அபூதாவூத்

மேலும் ‘காலத்தை திட்டுவதன் மூலம் ஆதமுடைய மகன் என்னை திட்டுகின்றான், என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி

எனவே காலம் மற்றும் நேரம் எதுவும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது அதற்கு எந்த சக்தியும் கிடையாது அல்லாஹ் அதை இயக்கிக் கொண்டிருக்கிறான் எனவே அவன் நாடியது தான் நடக்கும் என்று உறுதி கொள்ளவேண்டும். இத்தகைய உறுதியான கொள்கையே அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுத்தரும். இன்னும் எந்த செயலை செய்கின்ற பொழுதும் அல்லாஹ் அவனது தூதரின் வழிகாட்டுதல் இருக்கிறதா? என்று பார்த்து விளங்கி செயல்படவேண்டும். சத்தியத்தை விளங்கி செயல்படுவோமாக! இன்னும் இது போன்ற அனாச்சாரங்களிலிருந்து விடுபடுவோமாக!