ஜும்ஆ நாள்

அல்லாஹ் உன்னை நேசிக்கின்றானா ?

بسم الله الرحمن الرحيم

 

இவ்வலகில் வாழும் அனைத்தும் நேசிக்கும் பண்புள்ளவையாக இறைவன் படைத்துள்ளான்.மனிதர்கள் முதல் பறவைகள், மிருகங்கள் இப்படி அனைத்து படைப்புகளும் தங்களுக்குள் அன்பை, நேசத்தை வெளிப்படுத்தும் ஜீவன்களாகவே உள்ளன.

இவ்வுலகில் மனிதர்களின் மூலம் ஏற்படும் அன்பை விட படைத்தவனின் அன்பை பெறுவது மிகப்பெரும் பாக்கியமாகும். அப்படியானால் அந்த இறைவனின் அன்பை பெறுவது எப்படி? எதன் மூலம் அதை அடையலாம் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் அன்பு கிடைத்துவிட்டால் இந்த உலகில் அனைத்தும் கிடைத்து விட்டது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அவன் அழைத்து ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். எனவே அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று ஜிப்ரீல் அறிவிப்பார். உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. நூல்: புகாரி

அல்லாஹ்வின் அன்பு கிடைப்பதற்கு முதன் முதலில் முக்கியமானது இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி நடந்தால் மட்டுமே கிடைக்கும்.

 (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 03:31

முஃமின்கள் மீது அன்புடனும் இறை நிராகரிப்பவர்களுடன் கடுமையாகவும் நடந்துக் கொள்ள வேண்டும்.

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். அல்குர்ஆன் 05:54

நாம் செய்யும் உபரியான வணக்கங்களின் மூலம் இறைவனின் அன்பை பெறமுடியும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். . நூல்: புகாரி

தொழுகையில் மிக முக்கியமான, சிறப்பு பெற்ற ஒன்று இரவு தொழுகையாகும். கியாமுல் லைல் என்னும் தஹஜ்ஜுத் தொழுகையை ஒருவர் தொழுவதன் மூலம் இரவை உயிர்ப்பிக்கிறார். இஹ்யாவுல் லைல் என்ற இரவை உயிர்ப்பிப்பது இறைவனுக்கு மிகவும் பிடித்தமான செயல்.

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக; அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. அல்குர்ஆன் 73:1-4

மற்ற உபரித் தொழுகைகளை நேரமிருந்தால் தொழுது கொள்ளலாம். ஆனால் இத்தொழுகை தொழ வேண்டுமெனில் நேரத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆம்! இரவுத் தூக்கத்தின் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலே ஒழிய இந்த வணக்கத்தை நிறைவேற்றிட முடியாது. இதனால் இறைவனே இறைமறையில் இத்தொழுகையைப் பற்றிய மாண்புகளைக் கூறி இவ்வாறு ஆர்வமூட்டுகிறான்:

(நபியே!) இன்னும் இரவில் (ஒரு சில) பகுதியில் உமக்கு உபரியான (நபிலான) தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுது வருவீராக! (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ‘மகாமே மஹ்மூதா’ என்னும் (புகழ் பெற்ற) தளத்தில் உம்மை எழுப்பப் போதுமானவன். அல்குர்ஆன் 17:79

அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தை துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கையார்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தர்மங்களில்) செலவும் செய்வார்கள். அல்குர்ஆன் 32:15,16
இந்த அற்புத அமலின் சிறப்புகளை அறிந்தவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடுவதற்காக ஆர்வத்துடன் எழுந்து அவன் முன் நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்
மக்களே! ஸலாம் கூறுவதை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதீ
நபி (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தொழுவார்கள். அதனால் அவர்களின் பாதங்கள் வீங்கி விடும். ‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? தங்களுக்குத் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்டனவே…’ என்று நான் வினவினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் (இறைவனுக்கு) நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?’ என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்
எனக்காக ஒருவரையொருவர் பிரியப்படுகின்றவர்களுக்கு என் அன்பு கடமையாகி விட்டது. எனக்காக ஒருவரையொருவர் சந்திப்பவர்களுக்கு என் அன்பு கடமையாகி விட்டது.எனக்காக ஒருவர் மற்றவருக்கு செலவு செய்பவர்களுக்கு என் அன்பு கடமையாகி விட்டது.எனக்காக ஒருவரையொரவர் சேர்ந்திருப்பவர்களுக்கு என் அன்பு கடமையாகி விட்டது என் அல்லாஹ் கூறுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . நூல் : அஹ்மத்
மனிதன் பாவம் செய்பவன்தான் அதிலிருந்து மீண்டு தன் மரணத்திற்கு முன் தன் வாழ்க்கையை மாற்றி தன் மரணத்திற்கு முன் நற்காரியங்களை செய்வதும் அல்லாஹ்வின் அன்பை பெற முடியும்.
அல்லாஹ் ஓர் அடியானுக்கு நன்மையை நாடிவிட்டால் நன்மையை செய்ய வைக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! நன்மையை செய்ய வைப்பது என்றால் எப்படி என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு முன்பு அவருக்கு நற்காரியங்கள் செய்ய அருள் புரிவான் என்று கூறினார்கள். நூல் : திர்மிதி
இறைவனின் அன்பு கிடைத்து விட்டால் அதற்கு பின் அல்லாஹ்வின் கோபமே ஏற்படாது .
என்னையும் ஸுபைர்(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி ‘நீங்கள் இன்ன ‘ரவ்ளா’ என்னும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாதிப் ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்’ என்று கூறினார்கள். நாங்கள் ரவ்ளாவுக்குச் சென்று ‘கடிதம் (எங்கே)?’ என்று (அப்பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண் ‘அவர் என்னிடம் கொடுக்கவில்லை’ என்று கூறினாள். நாங்கள் ‘நீயாக அதை வெளியே எடுக்கிறாயா அல்லது நான் உன்னை நிர்வாணப்படுத்தட்டுமா?’ என்று கேட்டோம். உடனே அவள் தன் நீண்ட கூந்தல் தொட்டுக் கொண்டிருக்கும் இடுப்பிலிருந்து அதை வெளியே எடுத்தாள். மடியிலிருந்து (கடிதம் கிடைத்த) உடனே நபி(ஸல்) அவர்கள் ஹாதிப் அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். ஹாதிப் அவர்கள் (வந்து) ‘(இறைத்தூதர் அவர்களே!) அவசரப்படாதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நிராகரிக்கவுமில்லை; இஸ்லாத்தின் மீது எனக்கு நேசத்தைத் தவிர வேறெதுவும் அதிகரிக்கவுமில்லை. தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும் அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகையோர் இருக்கின்றனர். ஆனால் எனக்கோ எவருமே இல்லை. எனவே அவர்களிடம் நான் எனக்கு ஓர் ஆதரவை உருவாக்கிக் கொள்ள விரும்பினேன்’ என்று கூறினார்கள். அவர்களின் இந்த வாக்குமூலத்தை நபி(ஸல்) அவர்கள் உண்மையானதென்று ஏற்றார்கள். ஆனால் உமர் அவர்கள் ‘என்னை அவரின் கழுத்கை; கொய்தெறிய அனுமதியுங்கள். ஏனென்றால் அவர் நயவஞ்சகராகிவிட்டார்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘உங்களுக்கென்ன தெரியும்? அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் தூய எண்ணத்தை அறிந்து (அவர்களை நோக்கி) ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறி விட்டிருக்கலாம்’ என்றார்கள். நூல்: புகாரி
அல்லாஹ்வின் பண்புகளை நாம் விரும்பும் போது அல்லாஹ்வும் நம்மை விரும்புகின்றான்
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர் தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர் ‘ஏனெனில் அந்த பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள். நூல்: புகாரி
எனவே அல்லாஹ்வின் அன்பை பெற்று மறுமையில் உயர்வான சுவனத்தை அடையும் பாக்கியம் பெற்றவர்களாக வாழ்வோம்.