இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்
بسم الله الرحمن الرحيم
அல்லாஹ் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு தேவையான அனைத்து வகையான வாழ்வாதாரங்களையும் படைத்துள்ளான். அதே நேரத்தில் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும் மீண்டும் ஒரு நாள் எழுப்பபட்டு மறுமையின் நிரந்த வீட்டிற்கு மனிதர்கள் செல்வார்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் இவ்வுலகில் வாழும் போது உலகத்தில் பார்க்கும் அனைத்து இன்பங்களும் இவ்வுலகம் நிரந்தரமான, நிம்மதியான உலகத்தை போன்று காட்சி தருகின்றது . இந்த விசயத்தில் முஃமீன்கள் ஏமாந்து விடக்கூடாது.
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். அல்குர்ஆன் 75: 20,21
எனினும்இ நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். அல்குர்ஆன் 87: 16,17
செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும் (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. அல்குர்ஆன் 18: 46
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். அல்குர்ஆன் 17: 18
இவ்வுலகமே நிரந்தரமான உலகம் என்று நினைத்து நம்மில் பலரும் பாவங்களை செய்து, பிறரை ஏமாற்றி , மோசடி செய்து எப்படியாவது செல்வத்தை சேர்த்து வாழும் சூழ்நிலைகளை பார்க்க முடிகின்றது. இதற்கான காரணம் இந்த உலகத்தை பற்றிய மதிப்பீடை நாம் புரிந்துக் கொள்ளாததே ஆகும்.
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ‘ஆலியா’வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள் செத்துக் கிடந்த காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஆட்டை எடுத்து அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு ‘உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள் ‘எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’ என்று கேட்டார்கள்.மக்கள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில் இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’ என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்’ என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம்
அல்லாஹ்விடம் இவ்வுலகம் கொசுவின் இறக்கை அளவிற்கு மதிப்பு இருக்குமானால் ஓர் காஃபிருக்கு கூட அல்லாஹ் குடிக்க நீர் வழங்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் :திர்மிதி
மனிதனிடத்தில் செல்வங்களும் , வசதிகளும் அதிகரித்து விட்டால் தாமாகவே பாவங்களும் , அநியாயங்களும் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது.
மூஸா நபி காலத்தில் அதிகமான செல்வங்களை வழங்கபட்ட பிஃர்அவன் கடும் அட்டூழியங்களை செய்தான் என்று குர்ஆன் பல இடங்களில் அவனின் வரலாற்று பகுதிகளை குறிப்பிட்டு காண்பிக்கின்றது.
இன்னும்: ‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும் இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில் அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்’ என்று மூஸா கூறினார். அல்குர்ஆன் 10: 88
மனிதனுக்கு பொருள் தேவைதான் ஆனால் அதில் பேராசை ஏற்பட்டு விட்டால் மனிதன் அதில் விழுந்து தன்னையே அழித்துக் கொள்கின்றான் .
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். நூல் : புகாரி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா (காப்பு வரியை) வசூலித்துக் கொண்டு வரும்படி (அரசு அதிகாரியாக்கி) அனுப்பியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நெருப்பு வணங்கிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் (வந்து) நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றினார். நபி(ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்ப அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு ‘அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்’ என்று கூற அன்சாரிகள் ‘ஆம் இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள். ‘அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்களுக்கு நற்செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்’ என்று கூறிவிட்டு ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாக உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். நூல் : புகாரி
நீங்கள் ஈனா என்ற வியாபாரத்திற்காக பைஅத் செய்து, மாட்டின் வாலை பிடித்து , விவசாயத்தை கொண்டு திருப்தி அடைந்து, ஜிஹாத் செய்வதை விட்டு விட்டால் நீங்கள் உண்மையான மார்க்கத்திற்கு திரும்பு வரை அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டிவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அபூதாவூத்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :’ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.’ எதிரிகளுக்கு உங்களைப் பற்றிய பயம் ஈடுபட்டு போய் விடும். நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள்.அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ‘அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ ?’அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.’அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?.’அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் : ‘இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.’ என்பதாகும். நூல்- அபூதாவுத்
ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால் உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்’ என்றார்கள். நூல் : புகாரி
இவ்வுலகில் எவர் அதிகமான செல்வங்களை சேர்த்தாரோ அவரே வசதி படைத்தவர் , செல்வந்தர் என்று அழைக்கப்படுவார்கள் ஆனால் உண்மையான செல்வந்தார் யார் என்பதை நபியவர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். நூல் : முஸ்லிம்
இந்த உலக வாழ்க்கைகாக மறுமை வாழ்க்கை மறந்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் அல்ல
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். அல்குர்ஆன் 17: 18
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ – அல்குர்ஆன் 10: 7
எனவே இந்த உலகத்தின் யதார்த்ததை புரிந்து இம்மைக்காக மறுமையை மறந்து ஆசையையும் தாண்டி பேராசையோடு வாழ்ந்து மரணிக்காமல் தேவைகேற்ப செல்வத்தை அடைந்து அல்லாஹ் வழங்கிய செல்வத்திலும் அபிவிருத்தியை தந்து மறுமையில் வெற்றி பெறும் கூட்டத்தில் நம்மை சேர்த்தருள்வானாக!