ஒழுக்கங்கள்

உழுவின் ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم

ஒளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்

அல்லாஹ் கூறுகிறான் : விசுவாசங்கொண்டோரே!நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹுசெய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)
யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) ஒளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் ஒளு செய்வதின் சிறப்புகள்
ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் ஒளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் தண்ணீரோடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம்

யார் நல்ல முறையில் ஒளு செய்கின்றாரோ அவருடைய நகத்துக்குக்கீழிலிருந்து கூட அவருடைய உடம்பால் செய்த பாவங்கள் வெளியாகிவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம்
ஒளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம்,கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட ) அபூஹுரைரா(ரலி)அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக்கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள். புகாரி , முஸ்லிம்

ஒளு செய்யும் முறை
1- நிய்யத்து வைப்பது. அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
(நிய்யத்து வைப்பதென்றால் மனதால் ஒளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)
2- ஒளு செய்யு ஆரம்பிப்பதற்குமுன் பிஸ்மி சொல்வது.
யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு ஒளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு மாஜா, திர்;மிதி
3- வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது.
நீங்கள் ஆடை அணிந்தாலும், ஒளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், அபூதாவூத், திர்;மிதி
4- இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது.
உத்மான் (ரலி) அவர்கள் ஒளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்….. என் ஒளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் ஒளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
5- மிஸ்வாக் செய்து கொள்வது.
என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு ஒளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத்,திர்மிதி,அபூதாவூத்
6- வாய்க்கும், மூக்கிற்கும் தண்ணீர் செலுத்துவது.
நபி (ஸல்) அவர்களின் ஒளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி)அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, அப்போது ஒளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை அழைத்து (ஒளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒருமுறை அள்ளி தண்ணீரால் வாயையும் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறைசெய்தார்கள். புகாரி , முஸ்லிம்
நீ ஒளு செய்தால் வாயை கொப்பளித்துக் கொள் என்பதாக லகீத் இப்ன் ஸுப்ரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத் , பைஹகி
வலது கையினால் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தி இடது கையினால் சிந்தி விடுவதே நபி வழியாகும்.
அலி (ரலி) அவர்கள் ஒளு செய்வதற்குரிய தண்ணீரை அழைத்து (ஒளு செய்தார்கள்) பின்பு மூக்கிற்கும் தண்ணீh செலுத்தி இடது கையினால் சிந்தி விட்டு இதுதான் நபி(ஸல்) அவர்கள் செய்த ஒளு என்றார்கள். அஹ்மத், நஸாயி
அலி(ரலி) அவர்கள் ஒளு செய்யும் போது நாங்கள் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தோம், வலது கையினால் வாய்க்கும் மூக்கிற்கும்; தண்ணீர் செலுத்தினார்கள், பின்பு இடது கையினால் மூக்கை சிந்திவிட்டார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள், யார் நபி (ஸல்) அவர்கள் செய்த ஒளுவை பார்க்க விரும்புகின்றார்களோ அது இது போன்றுதான் என்று கூறியதாக அப்து கைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். தாரமி
7-முகத்தை கழுவுதல்.
உத்மான்(ரலி) அவர்கள் ஒளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் ஒளு இருந்ததாக கூறினார்கள், புகாரி, முஸ்லிம்
8- தாடியை கோதி கழுவுதல்.
நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை கோதி கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்)அவர்கள் ஒளு செய்தால் கையால் தண்ணீரை அள்ளி எடுத்து தன் தாடியை கோதி கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள்.அபூதாவூத், ஹாகிம்,
9- இரு கைகளையும் முழங்கைவரை கழுகுவுதல்.
உத்மான்(ரலி) அவர்கள் ஒளு செய்வதற்காக தண்ணீரை கொண்டு வரச்செய்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் ஒளு இருந்ததாக கூறினார்கள், புகாரி, முஸ்லிம்
10- விரல்களை கோதி கழுகுவுதல்.
நீ ஒளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். அஹ்மத், திர்மிதி,இப்னு மாஜா
நபி(ஸல்) அவர்கள் ஒளு செய்தால் தன் இரு கால்களின் விரல்களை தன் (கையின்)விரல்களைக் கொண்டு குடைந்து கழுகுவார்கள். இப்னு மாஜா, அபூதாவூத்
11- மூன்று தடவை உறுப்புக்களை கழுகுவுதல்(தலையையும், காதையும் ஒரு தடவைதான் மஸ்ஹு செய்ய வேண்டும்)
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்)என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் வரம்புமீறியவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், முஸ்லிம்
நபியவர்கள் ஒரு தடைவ மேலும் இரண்டு தடவையும்; வுளு செய்திருக்கின்றார்கள், ஆனால் மூன்று தடவையே பெரும்பாலும் செய்திருக்கின்றார்கள்.
12- ஒளு செய்யும் உறுப்புக்களை நன்றாக தேய்த்துக் கழுவுதல்.
உறுப்புக்களை தேய்த்து வுளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து ஒளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், இப்னு ஹிப்பான்
13- தலையையும், காதையும் மஸ்ஹு செய்வது(தடவுவது)
நபி (ஸல்) அவர்கள் தன் இரு கையினாலும் தன் தலையை மஸ்ஹு செய்தார்கள், (அதாவது )தலையின் ஆரம்ப பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடதி வரைக்கும் இரு கையையும் கொன்டு சென்று மீண்டும் ஆரம்பி;த்த இடத்துக்கே அவ்விரு கையையும் மீட்டினார்கள்.புகாரி,முஸ்லிம்
தலையை மஸ்ஹும் செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிளைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பா அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹு செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹு செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பா அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹு செய்தார்கள், தலையில் தலைப்பா இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்வது நபிவழியல்ல. ஆனால் தலைப்பா அணியாத சாதாரண நிலையில் நபி (ஸல்) அவர்கள் தலை முடி அனைத்தையும் மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.
14- இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்வது, காதை மஸ்ஹு செய்வதும் ஒரு தடவைதான். (ஆழ்காட்டி விரலினால் காதின் உழ் பகுதியையும், பெருவிரலினால் வெளிப்பகுதியையும் தடவுவது)
நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதின் உள் பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹு செய்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் : தலையையும், இரு காதையும் ஒரு தடவை மஸ்ஹு செய்தார்கள்.அபூதாவூத்
15- இரண்டு கால்களையும் கரண்டைக்கால் வரை கழுவுதல்.
ஒரு பிரயாணத்திலே நபி (ஸல்) அவர்கள் எங்களை பிந்தி விட்டடார்கள், நாங்கள் அஸர் தொழுகையை பிற்ப்படுத்திய நிலையில் எங்களை நபியவர்கள் வந்தடைந்தார்கள், (பின்பு தொழுகைக்காக) நாங்கள் ஒளு செய்து எங்களின் கால்களை தண்ணீரால் தடவினோம், அப்போது கணுக்கால்களுக்கு நரக வேதனைதான் என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபியவர்கள் கூறினார்கள். புகாரி , முஸ்லிம்
கால்களை கழுவும் போது கரண்டைக்காலை தேய்த்துக்கொள்ள வேண்டும், அதே போன்று கால் விரல்களையும் கை விரல்களால் கோதி கழுவ வேண்டும்.
காலுறைக்கு மஸஹ் செய்தல்
ஒருவர் ஒளுச்செய்துவிட்டு காலுறை அணிந்து ஒளு முறிந்துவிட்டால் மீண்டும் ஒளுச்செய்யும் பொழுது காலுறையை கலட்டவேண்டிய அவசியமில்லை மாறாக காலறையின் மேல்பகுதியின் மீது தடவினால் போதுமானதாகும்.
நான் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதைவிட்டுவிடும். கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்தார்கள் என முகீரா(ரலி) அறிவித்தார்.புகாரி
நாங்கள் பிரயாணத்தில் இருந்தபொழுது கடமையான குளிப்பைத்தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.திர்மிதி,இப்னுமாஜா
அலி(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் மார்க்கம் மனித எண்ணத்தின் அடிப்படையில் அமைந்திருந்தால் காலுறையின் மேற்பகுதியில் மஸஹ் செய்வதைவிட கீழ்ப்பகுதியில் மஸஹ் செய்வது சரியானதாகும் என்றாலும் நபி(ஸல்)அவர்கள் காலுறையின் மேற்பகுதியில்தான் செய்தார்கள்.
ஒளு செய்த பின் ஓதும் துஆ.
உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் ஒளு செய்துவிட்டு பின்பு

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ الله ُوَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

என்ற துஆவை ஓதினால் அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசலால் நுழைய முடியும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்
குறிப்பு : ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது சில குறிப்பிட்ட துஆக்கள் ஓதுவதற்கு சரியான ஆதாரமில்லை.
ஒளுவை முறிக்கக்கூடியவைகள் :
1.மலஜலம் கழித்தல்
நபி(ஸல்)அவர்கள் தமது தேவைகளுக்காக (மலஜலம் கழிக்க)சென்றார்கள் பின்னர் ஒளு செய்தார்கள்.இப்னுமாஜா
2.காற்றுப்பிரிதல்
ஹதஸ் ஏற்படாதவரை, தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருக்கக் கூடியவர் தொழுகையில் இருப்பவராகவோ கருதப்படுவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) சொன்னபோது, அரபி சரியாகப் புரியாத ஒருவர் அபூ ஹுரைராவே! ‘ஹதஸ்’ என்றால் என்ன? என்று கேட்டதற்கு அவர் பின் துவாரத்திலிருந்து வெளியாகும் சப்தம் என்று கூறினார்.புகாரி,முஸ்லிம்
காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி,முஸ்லிம்
3.இச்சைநீர் வெளிப்படுதல்
‘மதி எனும் காம நீர் வெளியாகும் ஆடவனாக இருந்தேன். (அதைப் பற்றி) கேட்க வெட்கப்பட்டு, மிக்தாத் என்பவரை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அலீ(ரலி) அறிவித்தார்.புகாரி
4.மர்ம உறுப்பை தொடுதல்
யாரேனும் தன்னுடைய மர்மஉறுப்பை தொட்டால் உளுச்செய்யாமல் தொழக்கூடாது என நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள். அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, நஸயீ
ஒரு மனிதர் தன்னுடைய மர்மஉறுப்பை தொட்டால் உளுச்செய்வது அவசியமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதுவும் உமது உறுப்புகளில் ஒரு உறுப்பு தானே என பதிலளித்தார்கள். அபூதாவூது,திர்மிதி,நஸயீ
மேற்கூறிய இரண்டு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதாக இருப்பதால் முரண்படாதவகையில் முடிவெடுக்க வேண்டும் அதாவது இச்சையுடன் தொட்டால் ஒளு முறிந்துவிடும் இச்சையில்லாமல் தொட்டால் ஒளு முறியாது என்று விளங்கிக் கொள்ளவேண்டும்.
5.தூங்குதல்
நான் எனது சிறிய தயார் மைமூனா(ரலி)அவர்கள் வீட்டில் இரவு தங்கினேன் நபி(ஸல்)அவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள். நான் அவர்களின் இடப்புறத்தில் நின்று கொண்டேன் எனது கையை பிடித்துக் கொண்டு தனது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள் நான் தூங்கிவிடும்பொழுது எனது காது சேனையைப் பிடித்து என்னை விழ்க்கச் செய்வார்கள்.முஸ்லிம்
இஷாத் தொழுகைக்காக நபி(ஸல்)அவர்கள் வருவதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நபித்தோழர்களின் தலைகள் (தூக்கத்தினால்)ஆடும் அவர்கள் மீண்டும் ஒளுச்செய்யாமல் தொழுவார்கள்.முஸ்லிம்,திர்மிதி
மலம்,ஜலம்,தூக்கம் போன்றவை ஏற்பட்டுவிட்டால் ஒளுச் செய்யும்பொழுது காலுறைகளை கலற்றாமல் அதன்மீது மஸஹ் செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.அஹ்மது,நஸயீ,திர்மிதி
இரண்டு விதமான கருத்துக்களை மேற்கூறிய ஹதீஸ்கள் காட்டுகிறது எனவே முரண்படாத வகையில் அதாவது அயர்ந்து தூங்கிவிட்டால் ஒளு முறிந்துவிடும் லேசாக தூங்கினால் முறியாது என விளங்க வேண்டும்.
6.ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்
ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் ஒளு நீங்குமா? நபியவர்களிடம் கேட்கப்பட்டது நீவிரும்பினால் ஒளுச்செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம் என பதிலளித்தார்கள். ஒட்டக இறைச்சி சாப்பிடுவதால் ஒளு நீங்குமா? எனக் கேட்டபோது ஆம் ஒளுச்செய்ய வேண்டும் என பதிலளித்தார்கள். முஸ்லிம்,அஹ்மது
மேலே கூறப்பட்ட செயல்கள் மூலமே ஒளு முறியும் இவையன்றி வாந்தி எடுத்தல், இரத்தம் வெளியாகுதல் பெண்களை தொடுதல் போன்ற செயல்கள் ஒளுவை முறிக்காது.