ஒழுக்கங்கள்

கழிவறைக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم

மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்களா? என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட போது, ஆம் மல, ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடா தென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடா தென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்) விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடா தென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என பதிலளித்தார்கள். முஸ்லிம்.

மல ஜலம் கழிக்கும் முறைகள்

1- கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மல ஜலம் கழிக்கக்கூடாது.
நீங்கள் மல, ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், பின்னோக்கவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். நஸாயி
2- கட்டடத்திற்குள் கிப்பலாவை முன்னோக்கியோ, பின்னோக்கியோ மல, ஜலம் கழிப்பதில் குற்றமில்லை.
ஒரு நாள் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்கு மேல் நான் ஏறினேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கிப்லாவை பின்னோக்கியும் மல, ஜலம் கழிப்பதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். திர்மிதி
3- மல ஜல கூடத்திற்குள் நுளையும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

اَللَّهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْـخُبْثِ وَالْـخَبَائِث

அல்லாஹும்ம இன்னி அஊது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி
பொருள் – இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
4- கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

غُفْرَانَكَ

குஃப்ரான(க்) திர்மிதி
பொருள் :- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.
5- திறந்த வெளியில் மல, ஜலம் கழிக்கும் போது மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு தூரமாக செல்ல வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக)செல்வார்கள். அபூதாவூத்
நபியவர்கள் மல, ஜலம் கழிக்க விரும்பினால் பூமியை நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். ஆதாரம்;- திர்மிதி,அபூதாவூத்
6- வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது
உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க நுழைந்தால் தன் ஆண் உறுப்பை தன் வலது கையினால் தொடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். – அபூதாவூத், நஸாயி
7- கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது.
உங்களில் ஒருவர் மல, ஜலம் கழிக்கச் சென்றால் சுத்தம் செய்யக்கூடிய மூன்று கற்களைக் எடுத்துச் செல்லட்டும், அது சுத்தம் செய்வதற்குப் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குள் நுழைந்தால் நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் நபியவர்களுக்கு தண்ணீர் பாத்திரத்தை சுமர்ந்து செல்வோம். நபியவர்கள் அதைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். நஸாயி
8- மூன்று கற்களை விட குறைந்த கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள், நான் இரண்டு கற்களையும் ஒரு விட்டயையும் கொண்டு வந்தேன், இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு விட்டயை (பார்த்து இது) அசுத்தமானதென்று வீசி விட்டார்கள் என அபூ உபைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். திர்மிதி
9- உட்கார்ந்து கொண்டு மல ஜலம் கழிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக யாராவது உங்களுக்கு கூறினால் அதை நீங்கள் நம்ப வேண்டாம், நபியவர்கள் உட்கார்ந்து கொண்டுதான் சிறுநீர் கழித்திருக்கிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நஸாயி

10- நிர்ப்பந்தமான நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து அதன் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். திர்மிதி, அபூதாவூத்
(இச்சம்பவம் வெளியில் நடந்ததால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லாஹ்வே மிக அறிந்தவன்)
11- நடை பாதை, மர நிழல் போன்ற இடங்களில் மல ஜலம் கழிக்கக்கூடாது.
மக்களுடைய வழியிலும், அவர்கள் (தங்கும் மர) நிழலிலும் மல ஜலம் கழிப்பதால் ஏற்படும் இரு சாபங்களை அஞ்சிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்
12- குளியளறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
குளிக்கக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அபூதாவூத்
ஒளு செய்யக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, காரணம் அதன் மூலமாகத்தான் அதிகமான வஸ்வாஸ் (சந்தேகங்கள்) ஏற்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். அஹ்மத்
13- தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக்கூடாது.
ஒளு செய்யக்கூடிய, அல்லது குழிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். நஸாயி
14- மல ஜலம் கழித்த பின் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து பிறகு மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம்செய்தார்கள்). நஸாயி
15- மல, ஜலம் கழித்து சுத்தம் செய்வதற்கு முன் ஸலாம் சொல்லப்பட்டால் அதற்கு பதிலளிக்கக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் நபியவர்களுக்கு ஸலாம் கூறினார், அதற்கு நபியவர்கள் பதிலளிக்கவில்லை. நஸாயி
16- சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாததினால் கிடைக்கும் தண்டனை.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்) பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள்செல்லித் திரிபவராக இருந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸாயி
எனவே மல, ஜலம் கழிக்கும்போது பேண வேண்டிய ஒலுங்குகளை பேணி அல்லாஹ்வின் அருளை பெறுவோம்.