ஒழுக்கங்கள்

கோபம்

بسم الله الرحمن الرحيم

கோபம்

கோபம் பொல்லாதது அது கொலை செய்யவும் தயங்காது, கொடிய செயலை செய்யவும் தயங்காது அந்த அளவிற்கு மோசமான குணமே கோபம் என்பதாகும். இது கண்டிப்பாக ஒரு முஸ்லிமிடம் இருக்கக்கூடாது என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நபி (ஸல்) அவர்களிடம் இது இருக்கக்கூடாது என்பதை அல்லாஹ் எதிர்பார்த்தான் அதை அவர்கள் நிறைவேற்றவும் செய்யாதார்கள்.

நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா? அல்குர்ஆன்: 46:35

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது. அல்குர்ஆன்: 68:48.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். அல்குர்ஆன்: 2:153

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், ‘எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், ‘கோபம் கொள்ளாதீர் ‘ என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘எனக்கு அறிவுரை கூறுங்கள்! ‘என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் ‘நீர் கோபம் கொள்ளாதீர்!’ என்றே பதில் தந்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழி, (புகாரி)

வீரன் யார்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழி (புகாரி)

கோபம் நீங்கிட நபியவர்களின் போதனைகள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி ரழி (அபூதாவூத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ‘அறிவிப்பாளர் : அபூதர் ரழி (அபூதாவூத்)

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரின் தொண்டை நரம்பு புடைத்தது. உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும், ‘ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்” என்று கூறினார்கள். எனவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘நபி(ஸல்) அவர்கள், ‘ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு” என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், ‘எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டார். அறிவிப்பாளர் : சுலைமான் இப்னு சுரத்(ரலி) (புகாரி)

கோபம் மோசமானது எனவே அதிலிருந்து விடுபட்டு பொறுமை காத்து அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம்.