ஒழுக்கங்கள்

பிரார்த்தனையின் ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم

Image result for prayer in islam dua

பிரார்த்தனையின் ஒழுங்குகள்

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள் நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்முஃமின் -60)

1. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்
ஆகவே காஃபிர்கள் வெறுத்த போதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து)அழையுங்கள். (அல் முஃமின்-14)

2. அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அல்லாஹ் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . நூல்:திர்மிதி

என் அடியான் என்னை எப்படி நினைக்கின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் அறிவித்தார்கள் நூல்:முஸ்லிம், திர்மிதி

3. அல்லாஹ்விடத்தில் மட்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள் இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:திர்மிதி

4. அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும் முடிக்கவும்; வேண்டும்.
நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5. கேட்பதை மனதிலிருந்து கேட்க வேண்டும்.
பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்யுங்கள் இன்னும் தெரிந்து கொள்ளுங்கள் மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்)கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:திர்மிதி

6. அல்லாஹ் அருளிய அருடகொடைகளை பொருந்திக்கொண்டும் பாவத்தை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவா!நீ எனது இறைவன் நீயே என்னை படைத்தாய் நான் உனது அடிமை நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன் வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒரு அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி

7.அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும் இயலாமையையும் பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனிடம் ‘நிச்சயமாகத் துன்பம் என்னைப்பீடித்துக் கொண்டது நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக்கிருபையாளன் என்று (பிரார்த்தனை செய்து )அழைத்த போது. (அல் அன்பியா – 83)

ஜகரிய்யாவையும் (நபியே! நீர் நியைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனை அழைத்து ‘என் இரட்சகனே! என்னை(ச் சந்ததியில்லாது) தனித்தவனாக நீ விட்டுவிடாதே! நீயோ வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்’என்று(பிரார்த்தனை செய்த)போது.(அல் அன்பியா-89)

8. இன்பத்திலும் துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.
கஷ்டம் இன்னும் துன்பமுள்ள நேரத்தில் தன்னுடைய பிரார்;த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் சந்தோசமான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி
சந்தோசமான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள் கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னை தெரிந்து கொள்வான் என நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

9. அவசரப்படாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும்
அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம்

10. இரு கைகளையும் ஏந்திப்பிரார்த்திப்பது.
தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்தத்தனை செய்தார்கள் நான் அவர்களின் கக்கத்தின் வெண்மையை பார்த்தேன் என அபூ மூஸா அல் அஸ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்:புகாரி

நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும் சங்கையுள்ளவனுமாவான் ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் என ஸல்மானுல் பாரிஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:திர்மிதி

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள் மற்றும் காரணங்கள்.

1. ரமளான் மாதம்.

2. லைலத்துல் கத்ர் இரவு.

3. இரவின் கடைசிப்பகுதி.

4. பர்லான தொழுகைகளின் இறுதிப்பகுதி.

5. பாங்கு இகாமத்துக்கு மத்தியில்.

6. அரஃபா தினத்தில்.

7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.

8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.

9. தொழுகையில் ஸஜ்தாவில்: உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம் ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:முஸ்லிம்
ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் (அதில் கேட்கப்படும் பிரர்த்தனை ஏற்றுக்கொள்ளபடுவதற்கு) தகுதியுள்ளது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:முஸ்லிம்

10. சேவல் கூவும் போது: சேவல் கூவுவதை கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக்கேளுங்கள் அது மலக்கை காணும்போதுதான் கூவுகின்றது என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி,

11. பிரயாணி தன் பிரயாணத்தின் போதும், நோன்பாளி நோன்பு திறக்கும் போதும். நூல்:பைஹகி

12. பிறசகோதரருக்காக பிரார்த்திக்கும் போது: ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாக கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக, இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக எனவும் பிரார்த்திப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:முஸ்லிம்

13.பிரார்த்தனையில் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்: (ஆகவே முஃமின்களே!)உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அஃராப்-55)

14. ஹராமானவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

15. இரத்த உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்காமல் இருப்பது: யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்)அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் அப்படியென்றால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோம் என்றார்!அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள். நூல்:திர்மிதி

அன்புச்சகோதரர்களே! பிரார்த்தனை என்பது அல்லாஹ்விடத்தில் மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மட்டும் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் படைப்புகளில் குறிப்பாக மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மட்டும்தான் கேட்க வேண்டும். எனவே நமது தெவையை அல்லாஹ்விடம் முறையிட்டு கேட்டு பெறுவோம். அல்லாஹ் தரவில்லையென்றால் பொறுமை காட்போம். ஒன்று உலகில் கிடைத்துவிடும், ஒருவேளை உலகில் கிடைக்க வில்லையெனில் மறுமையில் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.