பித்அத்கள்

ஸஃபர் மாதம் பீடை மாதமா?

بسم الله الرحمن الرحيم

ஸஃபர் மாதம் பீடை மாதமா?

ஸஃபர் மாதம் பீடைமாதம் என்றும் இம்மாதத்தில் கடைசி புதனை ஒடுக்கத்து புதன் என்றும் கொண்டாடுகிறார்கள். இப்படி கொண்டாடுவதற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் நோய்வாய்ப்பட்டு இறுதி புதன் அன்று குணமடைந்தார்கள் என்று கூறி இம்மாதத்தை பீடை மாதம் என்றும் குறிப்பாக கடைசி புதனன்று சில காரியங்கள் செயவதன்மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் செய்து கொண்டிருக் கிறார்கள். இதற்கு எவ்விதமான ஆதாரமும் கிடையாது.

அல்லாஹ்வால் கணக்கிடப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை நாட்களுமே நல்ல நாட்களாகும். இதில் நல்ல நாள் கெட்ட நாள் இன்று பிரித்து பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல மாற்றமாக அல்லாஹ்வை நம்பாதவர்கள் செய்யக்கூடிய செயலாகும்.

ஸஃபர் மாதத்தில் இறுதி புதனன்று எண்ணை தேய்த்து குளித்துவிட்டு, விவரமறியாத அல்லது மார்க்கத்தை பிழைப்பாக்கிக் கொண்டிருக்கும் அறிஞர்களிடம் சென்று இலைகளில் அல்லது பளிங்கு தட்டில் சில குர்ஆன் வசனங்களை எழுதி அதை கழுவி குடிக்கிறார்கள். இது அறிவுக்கு பொருந்துகிறதா என்று ஒருகணம் சிந்தியுங்கள் ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் உலகில் இருந்து கொண்டுதானிருப்பான். அதனால் அறிஞர் என்ற போர்வையில் ஏமாற்றுகிறார்கள். இதை பாமரர்கள் சரியென நம்பி ஏமாறுகிறார்கள். எனவே அல்லாஹ்வோ, அவனது தூதரோ இவ்வாறு கற்றுத்;தரவில்லை. மாற்றமாக புதிதாக இஸ்லாத்தின் பெயரில் புகுந்துவிட்ட அனாச்சாரமாகும்.

மேலும் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டதின் நோக்கம் இதுவல்ல மாற்றமாக இதில் நல்லுணர்வு பெறவேண்டும், நேர்வழியடைய வேண்டும், ஓதவேண்டும், மற்றவர்களுக்கு கற்றுத்தரவேண்டும். மாற்றுமத நண்பர்களுக்கு இதை வழங்க வேண்டும் என்பன போன்றவற்றிற்காகவே குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டு நடந்தால் வெற்றியுண்டு. இவையல்லாமல் கரைத்து குடிக்கவோ, இறந்தவர்கள் வீட்டில் ஓதவோ, மந்திரித்து தாயத்து தகடுகளில் தொங்கவிடுவதற்கோ அல்ல என்பதை புரிந்து கொண்டு அல்லாஹ்வின் கோபத்தை பெறாமல் வாழ முயற்சிப்போம்.

ஸஃபர் மாதத்தின் அத்துனை அனாச்சாரங்களும் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித்தரவில்லை. அப்படி காட்டித்தராத விசயங்களை செய்பவர்களைப்பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:

(عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَت ْقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ(بخاري

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பளர் : ஆயிஷா(ரலி) நூல் : புகாரி.2697

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்)இந்த பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும்.

இன்னொரு புதுமை கடைசி புதனன்று தங்களுக்கு ஏற்;பட்டுள்ள கஷ்டங்களை போக்குவதற்காக பச்சை புற்கள் நிறைந்துள்ள பகுதிகளுக்கு சென்று வந்தால் கஷ்டங்கள் நீங்கிவிடும் என்ற மிக மோசமான நம்பிக்கை நமது ஈமானை வீணாக்கிவிடும். எனவே ஸஃபர்மாதத்தின் அத்தனை நாட்களும் நல்ல நாட்கள் தான் என்றிருக்கும் பொழுது எங்ஙனம் பீடை மாதமாகும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!

துன்பங்களை நீக்குபவன் யார் ?
அல்லாஹ் கூறுகிறான் :

وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلاَكَاشِفَ لَهُ إِلاَّهُوَوَإِن يَمْسَسْكَ بِخَيْرٍفَهُوَعَلَى كُلِّ شَيْءٍ قَدُيرٌ(الأَنْعَامِ(

இன்னும் (நபியே) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துன்பத்தைக் கொண்டு பீடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை (அவ்வாறே) அவன் உனக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் எவருமில்லை) அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (அல்-குர்ஆன் 6: 17(